ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987 ஆம் ஆண்டு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமைகள் தோறும் எம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் என்பவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்காக நல்லெண்ணம் கொண்ட சில பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று 30 மாணவர்களுடனும், நான்கு ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ்க் கல்வி நிலையம், படிப்படியாக வளர்ந்து இன்று 300க்கு மேற்பட்ட மாணவர்களுடனும், 35க்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடனும் சிறப்பாக இயங்கி வருகின்றது. பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை எமது ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.

2011 ம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கஷ்டப்படும் மாணவர்களுக்காக விஷேட வகுப்புக்கள் தனியான வகுப்புக்களில் நடாத்தப்படுகின்றன.

இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், மற்றும் நடனம், நாடகம், சங்கீதம் போன்ற தமிழ்க் கலைகளிலே ஈடுபாட்டையும், எமது தமிழ்க் கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

மாணவர்களது மொழி, கலை, கலாசாரம் மீதான திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும், அவர்களது தமிழ் மொழி அறிவு மீதான தரத்தை உயர்த்துவதற்காகவும் கல்வி நிலையத்தால் ஆண்டு தோறும் தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஆண்டுப் பரீட்சை, மற்றும் கலை விழா, வாணி விழா போன்ற கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்தப்படுகின்றன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழை ஹ்ச்க் பரீட்சையில் முதன்முதலாக 2 Unit பாடமாக எடுப்பதற்கு ஹோம்புஷ்; தமிழ்க் கல்வி நிலையம் எமது மாணவர்களை 2001ம் ஆண்டு முதல் தயார்ப்படுத்திவருகின்றது. HSC பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு எமது கல்வி நிலையத்தில் அனுபவமும், தேர்ச்சியும் வாய்ந்த பல ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.

எமது ஆசிரியர்களின் திறமையாலும், மாணவர்களின் முயற்சியாலும், பெற்றோரின் ஊக்கத்தினாலும் HSC பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்த மாணவர்களில் பலருக்கு, தமிழில் அவர்கள் அடைந்த பெறுபேற்றினால் அவர்களது பல்கலைக் கழக அனுமதிக் குறிப்பெண் (UAI) அதிகரித்திருந்தது உண்மையே.