ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987 ஆம் ஆண்டு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமைகள் தோறும் எம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் என்பவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்காக நல்லெண்ணம் கொண்ட சில பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று 30 மாணவர்களுடனும், நான்கு ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ்க் கல்வி நிலையம், படிப்படியாக வளர்ந்து இன்று 300க்கு மேற்பட்ட மாணவர்களுடனும், 35க்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடனும் சிறப்பாக இயங்கி வருகின்றது. பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை எமது ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.

2011 ம் ஆண்டு முதல்,  தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும்  கஷ்டப்படும் மாணவர்களுக்காக  விஷேட வகுப்புக்கள் தனியான வகுப்புக்களில் நடாத்தப்படுகின்றன.

இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், மற்றும் நடனம், நாடகம், சங்கீதம் போன்ற தமிழ்க் கலைகளிலே ஈடுபாட்டையும், எமது தமிழ்க் கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

மாணவர்களது மொழி, கலை, கலாசாரம் மீதான திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும், அவர்களது தமிழ் மொழி அறிவு மீதான தரத்தை உயர்த்துவதற்காகவும் கல்வி நிலையத்தால் ஆண்டு தோறும் தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஆண்டுப் பரீட்சை, மற்றும் கலை விழா, வாணி விழா போன்ற கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்தப்படுகின்றன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழை ஹ்ச்க் பரீட்சையில் முதன்முதலாக 2 Unit பாடமாக எடுப்பதற்கு ஹோம்புஷ்; தமிழ்க் கல்வி நிலையம் எமது மாணவர்களை 2001ம் ஆண்டு முதல் தயார்ப்படுத்திவருகின்றது. HSC பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு எமது கல்வி நிலையத்தில் அனுபவமும், தேர்ச்சியும் வாய்ந்த பல ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.

எமது ஆசிரியர்களின் திறமையாலும், மாணவர்களின் முயற்சியாலும், பெற்றோரின் ஊக்கத்தினாலும் HSC பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்த மாணவர்களில் பலருக்கு, தமிழில் அவர்கள் அடைந்த பெறுபேற்றினால் அவர்களது பல்கலைக் கழக அனுமதிக் குறிப்பெண் (UAI) அதிகரித்திருந்தது உண்மையே.

பாடசாலை இயங்கும் இடம்

 ஹோம்புஷ் பொது பாடசாலை, இராச்செஸ்டர் தெரு, ஹோம்புஷ் 2140 (ஹோம்புஷ் இரயில் நிலையம் எதிரில்)

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் வரலாறு

ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையம் 1987ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தம் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் எனும் இச்சையால் தமிழ் இனம் சார்ந்த பெற்றோர்களால் நிறுவப்பட்டது. அவர்கள் ஹோம்புஷ் இராச்செஸ்டர் தெருவில் உள்ள ஹோம்புஷ் பொது பாடசாலையில் காலை 9:00 மணி தொடங்கி மாலை 4:15 மணி வரை வகுப்புகள் நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர். இப்பாடசாலை துவங்கிய காலத்தில் 30 மாணவர்களையும் மற்றும் 4 ஆசிரியர்களையும் கோண்டு இயங்கியது. ஆரம்ப காலகட்டத்தில் 1987ஆம் ஆண்டு தொடங்கி 1990ஆம் ஆண்டு வரை இத்தமிழ்க் கல்வி நிலையம் சைவ மன்றத்தின் துணை கொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 1990 ஆண்டு முதல் தனி நிர்வாகக் குழு அமைக்கப் பெற்று இப்பாடசாலை நிர்வாகம் தனித்து இயங்கியது. இப்பாடசாலை தனித்து இயங்குவதற்காக NSW Ethnic Schools Board நிதியளிக்க ஒப்புக்கொண்டது. ஹோம்புஷ் புறநகர் பகுதியில் முதற் தமிழ்க் கல்வி நிலையம் தொடங்கிய பின் வரும் ஆண்டுகளில் சிட்னிவாழ் தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்ததால், பல்வேறு இடங்களிலும் இது போன்ற தமிழ்க் கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன. இதன் விளைவாக, 1992-1993 ஆண்டுகளில் என்.எஸ்.டபிள்யூ தமிழ் பாடசாலைகளின் கூட்டமைப்பு (NSW Federation of Tamil Schools) உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு அமைவதற்காக ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையமும் மிக முக்கிய பங்கை வகித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தனது வெள்ளி விழாவை கோலாகலமாக கொண்டாடியது. ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தமிழ் பாடப்புத்தகங்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினையும் ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் (LOTE) கற்பிப்பதற்கென அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழி பாடத்திட்டங்களையும் வழங்கியுள்ளது. என். எஸ். டபிள்யூவில் சிறந்த சமூக மொழி மாணவருக்கான கல்வி அமைச்சர் விருது உட்பட பல விருதுகளை ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் மாணவர்கள் வென்றுள்ளனர். மாணவர்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 1997ஆம் ஆண்டில் மாணவர் பிரதிநிதி சபை நிறுவப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. இன்று ஹொம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மொழியை கற்கிறார்கள். இவர்களுக்கு 37 ஆசிரியர்கள் தமிழ் மொழியை சிறந்த முறையில் கற்பிக்கிறார்கள். ஹோம்புஷ் புறநகர் பகுதி மட்டுமல்லாது சிட்னியிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களும் தமிழ் கற்கிறார்கள். இவ்வேளையில் ஹோம்புஷ் வாழ் தமிழ்ச் சமூகம் இக்கல்வி நிலையம் சிறப்பாக இயங்க சிறந்த பாடசாலை வசதிகளை வழங்கி உறுதுணையாக இருந்து வரும் ஹோம்புஷ் பொதுப் பாடசாலை முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் ஒப்புக்கொண்டு பாராட்டுகின்றது.

காரண விளக்கம்

 இந்த கையேடு ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் மற்றும் அதன் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எழுதப்பட்டுள்ளது. இந்த கையேடு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் மேம்படுத்தப்படவுள்ளது. எதிர்காலத்திலும் கையேட்டை தொடர்ந்து மேம்படுத்த உங்கள் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்.

எங்கள் பார்வை

ஆஸ்திரேலியாவில் பல கலாச்சார சூழலில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தங்கள் தாய்மொழி, தமிழ்க் கலாச்சாரம் மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தை புரிந்து கொள்ளவும், பராமரிக்கவும், வளர்க்கவும் ஊக்கப்படுத்தல்.

எங்கள் மேற்கொண்டப்பணி

தமிழ் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான தமிழ் கற்க்கும் சூழலை வழங்க முயற்சிக்கவும்.

  • தமிழ் மொழியைக் கற்கவும்
  • தமிழ் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் மற்றும்
  • தமிழ் பாரம்பரியம் மற்றும் விழுமியங்களைப் பற்றிய புரிதலை வளர்ப்பதும்.

பாடசாலையின் நோக்கங்கள்

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் நாங்கள்:

  • தமிழ் மொழி பேசுவோரின் கலாச்சார அடையாளத்தைப் பாராட்டுவது உட்பட, தமிழ் மொழி குறித்த நேர்மறையான மதிப்புகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்போம்.
  • ஒரு கூட்டுறவு மற்றும் ஆதரவான சூழ்நிலையை உருவாக்கி அதில் ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கவும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் தமிழ் மொழியில் தொடர்பு கொள்ளவும் முயற்சிப்போம்.
  • பொருத்தமான கற்க்கும் வாய்ப்புகளையும் மற்றும் அனுபவங்களையும் கொண்ட கற்றல் கற்பித்தல் திட்டங்களை உருவாக்கி வழங்குவோம். இதனால் பல்வேறு மொழி வளர்ச்சிக் காலக்கட்டங்களில் தேவையான மொழி அறிவும் திறன்களும் மற்றும் அணுகுமுறைகளையும் ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.
  • மொழி அறிவு மற்றும் கலாச்சார புரிதலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவோம்.
  • அனைத்து குழந்தைகளுக்கும் ஆக்கப்பூர்வமாய் இருக்க வாய்ப்புகளை வழங்குவோம்.
  • அனைத்து மாணவர்களுக்கும் தலைமைப் பண்புகளையும் அதற்கான திறன்களையும் வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவோம்.

எமது கல்வி நிலைய கட்டணம் ஒவ்வொரு மாணவருக்கும் NSW அரசு ஆண்டுதோறும் ஒரு சிறிய தொகையை வழங்கினாலும், பாடசாலையை நடாத்துவதற்கான செலவை ஈடுசெய்ய எமது பாடசாலை பின்வரும் வசதி கட்டணத்தை வசூலிக்கிறது: குடும்பத்தின் முதல் உறுப்பினருக்கு: ஆண்டுதோறும். $150.00 (பாலர் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை) அல்லது $205.00 (10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை). குறிப்பு: இதில் கலைவிழா மற்றும் வாணி விழா செலவுகளும் அடங்கும். அதன்பிறகு, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும்: 2வது குழந்தைக்கு $88.00 மற்றும் 3வது குழந்தைக்கு ஆண்டுக்கு $55.00. மேலும் ஒரு குழந்தைக்கு $100.00 “Creative Kids” எனும் இரசீதை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் குழந்தையின் பாடசாலை கட்டணத்தை செலுத்துவதற்கும் நீங்கள் பயன்படுத்தலாம். ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் பாடசாலை கட்டணமாக இந்த இரசீதுகளையும் ஏற்றுக்கொள்கிறது.